Thursday 11 August 2016

உலங் காங் (ஆஸ்திரேலியா )

 ஆஸ்திரேலியாவின் போர்ட் கெம்ப்லாவுக்கு, காலையில் கப்பல் வந்து சேர்ந்தது இரண்டாவது முறை இங்கு வருவது 2009 ல் ஒருமுறை வந்தேன்.சிட்னி நகருக்கு ரயிலில் இங்கிருந்து 2 மணி நேரம் என சொன்னதாக நினைவு  .
    மாலைவரையில் வேலை 5 மணிக்கு மேல் குளித்து தயாரானேன் .யாரும் என்னுடன் வெளியில் வர விரும்பவில்லை வேலை செய்த களைப்பு . கப்பலின் மேல் தளத்திலிருந்து பார்த்தால்  தெரியும் அழகிய கடற்கரை தான் என்னை தூண்டில் மீனை கவர்ந்திழுப்பது போல் அழைத்தது .
    இரு துறைமுக வாயில்கள் இங்கு கப்பலில் இருந்து இறங்கி நடப்பது தடை செய்யப்பட்டுள்ளது .வாயிலில் இருக்கும் காவலரை அழைத்து அவருடன் காரில் தான் செல்லவேண்டும் .அங்கு அடையாள அட்டைகளை சரிபார்த்துவிட்டு அனுமதிப்பார் .
    பின்பு அடுத்த வாயில் வரையில் நடக்கத்தான் வேண்டும் .துறைமுகத்தை ஓட்டிய இடம் முன்பு காடாக இருந்திருக்கலாம் செல்லும் வழியிலேயே பெரிய முயல்களை பார்த்தேன் .
     சிறிய வாயிலில் இன்முகத்துடன்  மீண்டும் அடையாள அட்டை  மற்றும் ஆஸ்திரேலியா நாட்டில் செல்வதற்குரிய அனுமதி சீட்டை பரிசோதித்து விடைதந்தார்  காவலர் .
  சிட்னி செல்லும் நெடுஞ்சாலையில்  வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருந்தது. ஞாயிறு ஆகையால் போக்குவரத்து குறைவாக இருந்தது .பாதசாரிகள் ,மிதிவண்டியில் செல்பவர்களுக்கு தனி பாதை .அதுவும் ஒருவழி பாதை .நம்மூரை போல பயப்படவேண்டியதில்லை சாலையில் நடக்கும்போது  .சாலையிலும் போக்குவரத்து விதிகளை யாரும் மீறுவதில்லை .காவலர் இல்லாத போதும் .
   சாலையை ஒட்டியே உயர்ந்த ,அடர்ந்த மரங்கள் நிரம்பிய காட்டு பகுதிதான் இருக்கிறது .பத்து நிமிடங்கள் மெதுவான நடைக்குபின் மழைமேகம் சூழ்ந்து வருவதை கண்டேன். வழக்கமாக வெளியே செல்லும் போது கைப்பையுடன் ஒரு பாலிதீன் பையும் வைத்திருப்பேன் இன்று மறந்து விட்டேன் .சட்டை பையில் எனது கைபேசி,அனுமதி சீட்டு ,அடையாள அட்டையை மழை வந்தால் எப்படி நனையாமல் காப்பது என எண்ணியபோதே லேசான தூறல் விழ ஆரம்பித்தது .வேகமாக நடக்க தொடங்கினேன் .பலத்த மழை நெருங்கி வருகிறது என்பதை பலத்த குளிர் காற்று உணர்த்தியது .
   ஒதுங்கி நிற்பதற்கு  சாலையில் இடமே இல்லை .பலத்த மழை என்னை நெருக்கியபோது ஒரு நட்சத்திர விடுதியை கண்டடைந்து அதன் வாயிலில் ஒதுங்கிகொண்டேன் .
    சூறாவளி காற்றுடன் பலத்த மழை ,சாலையில்  வாகனங்கள் இன்றி வெறிச்சோடின. விடுதியின் முன்பிருந்த மரம் வில்போல வளைந்து தரையில் விழுந்துவிடும் என்றே எண்ணினேன் .எனது கப்பல் என்னவாகியிருக்கும் என்ற எண்ணம் என் மனதில் மின்னல் போல் வந்து சென்றது .அந்த பெருமழையிலும் ஒரு பெண் சாலையோரமாக சென்றுகொண்டிருந்தாள் என்ன அவசர வேலையோ அவளுக்கு .
     இருபது நிமிட பெருமழை ஒய்ந்து மீண்டும் தூறல் .போய்விடலாம் என நினைத்தபோது கைப்பேசி நினைவு வந்தது .விடுதியின் வரவேற்பரையிலிருந்த பணிப்பெண்ணிடம் சென்று என்னை அறிமுகம் செய்துகொண்டு எனது கைபேசியை மழை நனையமால் பத்திரமாக கொண்டு செல்ல உதவுமாறு வேண்டினேன் .எதாவது பாலிதீன் பை வைத்துருப்பார்கள் என நினைத்தேன் .ஒரு பிளாஸ்டிக் டப்பாவை கொண்டு தந்தாள் .இது பெரியதாக இருக்கிறதே ,பாலிதீன் பை இல்லையா என கேட்டேன் .சிரித்து கொண்டே ஒன்றும் இல்லாததுக்கு இது பரவாயில்லை என அழகிய பற்கள் தெரிய சிரித்தாள்  (something is better than nothing take this ) நானும் சிரித்தேன். நன்றி கூறி கடற்கரை செல்லும் வழி கேட்டேன் .அடுத்த சந்தில் சென்றால் கோல்ப் மைதானம் வரும் தாண்டியதும் கடற்கரை என்றாள் .மீண்டும் நன்றி கூறி விடை பெற்றேன் .
    பச்சை பசேலென கண்ணுக்கெட்டிய தூரம் வரை  புல்வெளியாக இருந்தது .மாணவர்கள் நான்கு பேர் புல் தரையிலிருந்து எதையோ எடுத்து ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடிக்கொண்டு இருந்ததனர் .அருகில் சென்று பார்த்தபோது தான் தெரிந்தது அது பனிக்கட்டிகள் என கையில் எடுத்து பர்ர்தேன் நிலக்கடலையைவிட சற்று அளவில் பெரிது அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே அளவில் .இதை இப்படி ஒரே அளவில் செய்தது யார் என தோன்றிற்று .மனம் மகிழ்ச்சியில் துள்ளியது .பெய்தது ஆலங்கட்டி மழை .
    அங்கிருந்து பார்த்தால் அழகிய வானவில் அதை ரசித்து கொண்டே கீழிறங்கினால் கடற்கரையும் ,வானவில்லும் என்னை வரவேற்றன .மக்கள் நடமாட்டமே இல்லை .கணவன் ,மனைவி ,ஒரு குழந்தை அடங்கிய சிறிய குடும்பம் ஒன்று விளையாடி கொண்டிருந்தது .
   கடற்கரையின் மறு எல்லையில் ஒரு கலங்கரை விளக்கம் தெரிந்தது  அதை நோக்கி மெதுவாக நடக்க தொடங்கினேன் .இருவர் கடலலையில் சர்பிங் விளையாடும் தட்டுகளுடன் அலையை நோக்கி மகிழ்ச்சியுடன் சென்றுகொண்டிருந்தனர் .மழை ஓய்ந்திருந்தது ,கடற்கரையில் குப்பைகளின்றி சுத்தமாக இருக்கிறது .
    கலங்கரைவிளக்கம் நெருங்கும் போது நிறையபேர் ஆண்களும்,இளங்குமரிகளும் ,புதிதாக பயிற்சி செய்பவர்களும் உற்சாகத்துடன் கடலலையில் விளையாடி கொண்டிருந்தனர் சர்பிங் விளையாட்டுக்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடலை ஒட்டிய உடை அணிந்திருந்தனர். வடஇந்திய குடும்பம் ஒன்றை பார்த்தேன் .அங்கிருந்த பாறைகளில் குழந்தைகளுடன் மாலை பொழுதை மகிழ்வுடன் கழித்துகொண்டிருன்தனர் .
   கலங்கரை விளக்கம் அருகிலேயே பெரிய புல்வெளி .வாகனங்களில் வருபவர்கள் கலங்கரை விளக்கம் அருகில் வரை வந்து விடலாம் .வாகன நிறுத்துமிடத்தில் யாரும் ,இடையூறாக வாகனங்களை விட்டு செல்லவில்லை.புல்வெளியில் விளையாடி கொண்டிருந்த இரு குழந்தைகள் மலையாளம் பேசுவதை கேட்டேன் .அருகில் தாய் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள் .அயல் தேசத்தில் நம்மூர் முகம் கண்டால் பத்து நாள் ஆட்டுக்குட்டி போல்  மனமும் துள்ளுகிறது .பின்பு சந்திக்கலாம் என கலங்கரை விளக்கம், அருகில் இருந்த பழைய பீரங்கிகள் இருந்த இடம் நோக்கி சென்று விட்டேன்.
  
     மாலைநேர தற்காலிக கேளிக்கை கூடாரங்கள் காற்றில் தூக்கி வீசிஎறியபட்டு கலவரபகுதி போல் காட்சியளித்தது .
   இந்த அழகிய சிறிய நகரத்தின் பழைய பெயர் இல்லவாரா  ,தற்போது  உலங்காங் (woollongong)என்றழைக்கபடுகிறது .இந்த அழகிய கடற்கரை ப்ரிங்க்டான் பீச் (Brighton beach)  இங்கு  1800  முன்பே மீன்பிடி துறைமுகம் இருந்திருக்கிறது .1829 ல் ஒரு ராணுவ ரெஜிமென்ட் இங்கு துவங்கியிருக்கிரார்கள் .
    1888 ல் (அப்பவே ரயில் ) சிட்னி –உலங்காங் இடையில் ரயில் போக்குவரத்து துவங்கியபோதுதான் பயணம் எளிதாகியுள்ளது .அதன் முன்பு சரியான சாலைகள் இல்லாததால்(மலைபகுதியும் கரடு முரடாக சாலை வசதி இன்றி இருந்திருக்கலாம் ) .கடினமான கடல் போக்குவரத்து மட்டும் இருந்துள்ளது .போர்ட் கெம்லாவும்  நூற்றாண்டு பழமை வாய்ந்தது .
   பின்பு வந்து மலையாளி பெண்ணிடம் என்னை அறிமுக படுத்திகொண்டு பேசினேன் .கண்டப்ப மலையாளி னு தோனி நாட்டில எவிடயா என்றாள் .நான் கன்னியாகுமரி,தமிழ்நாடு என்றேன் .ஓ மலையாளம் அறியாம் அல்லே என்றாள் .தனது பெயர் லக்ஷ்மி எனவும் இங்கு கடந்த 5 ஆண்டுகளாக நர்ஸாக பணிபுரிவதாகவும் ,ஒரு ஆணும் ,பெண்ணும் என இரு குழந்தைகள் .தனது கணவன் நடை பயிற்சிக்கு சென்றுள்ளதாகவும்  ,நாட்டில் கோட்டயமானு எனவும், இந்த ஊரில் இந்தியர்கள் இன்னும் நிறையப்பேர் உள்ளதாகவும் கூறினாள் . பின்பு நான் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என கூறி விடைபெற்றேன் .
        லேசாக இருள தொடங்கியதும் மனம் நிறைவாக இருப்பதை உணர்ந்தேன் தனியாக வரும் போதுதான் இயற்கையுடன் மனம் லயித்து ரசிக்கவும் ,இதுபோன்ற அழகிய இடங்களையும் கண்டுபிடிக்கவும் முடிகிறது .கப்பல் பணியாளர்கள் இதுபோன்ற இடங்களுக்கு வர விரும்புவதில்லை .கிடைத்த வாய்ப்பில் வெளியில் வந்து குடிக்கவும் ,வணிக வளாகங்களில் தேவை உள்ளதும் ,தேவை இல்லாததுமான பொருட்களை வாங்கி குவித்து நேரத்தையும் ,பணத்தையும் வீணடிப்பர் என்னை போல விதிவிலக்கும் உண்டு .
    அருகிலேயே  உணவுவிடுதியை கண்டேன் .மக்கள் கையில் வைன் குடுவையுடன் மாலைநேரம் முடிந்து இருள் துவங்கும் வேளையில் தெரியும் செவ்வானத்தை ரசித்துக்கொண்டு இருந்தனர் .
   எனக்கு பிடித்த மீன் உணவை தேர்வு செய்யும்முன் அமெரிக்க பணம் வாங்கி கொள்வீர்களா என்றேன் .இல்லை ஆஸ்திரேலிய பணம் மட்டுமே ஏற்றுகொள்வோம் என்றார்கள் .இன்று ஞாயிறு ஆதலால் எல்லா பணம் மாற்றும் இடங்களும் அடைத்திருப்பார்கள் என்றாள் புன்னகையுடன் அங்கிருந்த பணிப்பெண் .
    எனக்கு உடனே நினைவு வந்தது .அந்த மலையாளி சேச்சியை கண்டு பணம் மாற்றிக்கொள்ளலாம் என .விரைந்து சென்றேன் .அப்போது அவளது கணவன் அஜீத் நடைபயிற்சி முடிந்து வந்திருந்தார் .வழக்கமான விசாரிப்புக்குபின் .இருபது அமெரிக்க பணம் கொடுத்து ஆஸ்திரேலிய பணம் தரும்படி வேண்டினேன் .இன்று இங்குள்ள உணவு விடுதியில் சாப்பிட ஆசை படுகிறேன் என்றேன் .
   கணவன் ,மனைவி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர் .எதோ தவறாகிவிட்டதோ என நினைத்தேன் .நாங்கள் காசு உபயோகிப்பதே இல்லை என்றார் அஜீத்.அனைத்து தேவைகளுக்கும்  வங்கி அட்டைதான் ,லக்ஷ்மி உன்னிடம் காசு இருக்கிறதா என்றார் ,சேச்சி தனது கைப்பையை துழாவிவிட்டு 5 டாலர் இருக்கிறது என்றாள் .
   அஜீத் என்னை காரில் அழைத்து சென்றார் .நான் சென்ற அதே உணவு விடுதி நான் சாப்பிடவிரும்புவதை சொன்னேன் ,அது வேண்டாம் என கூறி வேறு ஒரு உணவை காட்டி நன்றாக இருக்கும் என்றார் .எனக்கும் அவருக்கும் என இரண்டை கட்டிதருமாறு கூறிவிட்டு .குடிப்பதற்கு என்ன வேண்டும் என கேட்டார் கோக் ,பெப்ஸி எதுவும் நான் குடிப்பதில்லை என்றேன் விழி உயர்த்தி அதிசயமாக என்னை நோக்கிவிட்டு ,வங்கி அட்டைமூலம் பணம் செலுத்தினார் .பத்து ஆஸ்திரேலிய டாலர்  வீதம் .நான் அவரிடம் இருபது அமெரிக்க டாலர்களை அவரிடம் கொடுத்தேன் அதை வாங்க மறுத்து விட்டார்.
    தானும் கப்பலில் பணி செய்ய விரும்பி அதற்க்கான பயிற்சிகளை முடித்து , (CDC ) கப்பலில் செல்வதற்க்கான அடையாள அட்டையை பெற்று ஒரு  வருடம் மும்பையில் அலைந்துவிட்டு . பின்பு இங்கு வந்தாதாக சொன்னார் .கப்பலில் காப்டனின் சம்பளம் என்ன என கேட்டார் உத்தேசமாக 5 லட்சத்திற்கு மேல் என்றேன் .இவ்வளவு பணத்தை வைத்து என்ன செய்வார் அவர் என கேட்டார் .காப்டனிடம் கேட்க வேண்டிய கேள்வி என மனதிற்குள் சிரித்துகொண்டேன். இங்கே உதிரி பாகங்கள் விற்பனை பிரிவில் பணிசெய்வதகாவும் ,சிட்னியிலிருந்து இந்திய உணவு மற்றும் மசாலா பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை நண்பருடன் நடத்துவதாகவும் சொல்லிவிட்டு .எனது கப்பல் காப்டனிடம் சொல்லி அடுத்தமுறை இங்கு வரும்போது கப்பலுக்கான உணவு பொருட்களை தன்னிடம் வாங்குமாறு கேட்டுகொண்டார் .
  தனது தொலைபேசி எண்ணும் ,விலாசமும் அடங்கிய அட்டையை தந்து காப்டனிடம் கொடுக்கவும் சொன்னார் .
     அடுத்தமுறை வரும்போது அவரது வீட்டிற்கும் அழைத்து செல்வதாக உறுதியளித்தார் .நன்றி கூறி விடைபெற்றேன் .அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டேன் .
    நன்றாக இருட்டி விட்டிருந்தது கடற்கையை ஒட்டிய சாலையிலிருந்து விலகி பிரதான சாலைக்கு வரும் வழியில் ,பெரிய கேளிக்கை விடுதிகளும் ,விளையாட்டு மைதானமும் இருந்தது .
   கிளை சாலைகளில் கொஞ்சம் சுற்றிவிட்டு மீண்டும் பிராதன சாலைக்கு வந்து நடக்க ஆரம்பித்தேன். சாலையில்  வாகனங்களும் ,மக்கள் நடமாட்டமும் இன்றி  வெறிச்சோடிவிட்டது.நீண்ட நடைக்குபின் துறைமுக வாயிலை நெருங்குவதற்கு முன் உலங்காங் ஆடி கார் விற்பனை மையத்தை தாண்டி ,அடர்ந்த மரங்களும் ,போதிய வெளிச்சமின்றி இருந்த இடத்திற்கு அருகில் வரும் போது என்னெதிரில் வந்த  சுமாராக 15 வயது நிரம்பிய பெண்  தனியாக என்னை கடந்து சென்றாள் முதுகில் புத்தக பையாக இருக்கலாம் .
   அந்த இடம் கடந்ததும் இருளும் ,அடர் மரங்களும் உள்ள பகுதி .மனதில் தோன்றியது தேச தந்தை காந்தி விரும்பிய சுதந்திரம் ஆஸ்திரேலியாவில் சாத்தியாமாகி இருக்கிறது .இந்தியாவும் விரைவில் மாறவேண்டும் .
    துறைமுக காவலருடன்  காரில்  கப்பலுக்கு  செல்லும்போது .மாலையில் சூறாவளி காற்றுடன் பெய்த பெருமழையில்  கப்பலை கட்டியிருந்த  அனகோண்டா அளவில் இருக்கும் கயிறுகள் அறுந்து கப்பலின் முன்பகுதி கடலுக்குள் திரும்பி சென்றுவிட்டது என்றார் .
  கப்பலின் வாயிலில் அன்சாரி பாய் பணியிலிருந்தார் .மழை ,காற்று பற்றிய எந்த உள்ளூர்  வானிலை அறிக்கையும் தரவில்லை(இயற்கை தன் கட்டுப்பாட்டில் இருக்கிறது )  எதிர்பாராமல் நடந்தது .எனினும் கப்பலில் அவசரகால ஒலி எழுப்பி அனைவரும் சமயோசிதமாக  செயல்பட்டு பெரும் விபத்து தவிர்க்கபட்டிருந்தது.
  2015 நவம்பர்மாதம் போய்வந்தேன் .மெல்போர்ன் நினைவுகளை பின்பு எழுதுகிறேன் 

ஷாகுல் ஹமீது 
11-08-2016


படங்கள்   விரைவில்  .இணையம் போதிய வேகம் இல்லை .

1 comment: