Tuesday 24 October 2017

பனாமா -திருவனந்தபுரம் ஐம்பது மணி நேரம்.

அது 2008 ம் ஆண்டு ஐஜின் எனும் கார்கள் ஏற்றும் கப்பலில் பயிற்சி பிட்டராக டெக்கில் பணியாற்றினேன் .(2008 –மார்ச் முதல் ஆகஸ்ட் வரை)
சிங்கப்பூரிலிருந்து மார்ச் மாதம் சக பிட்டரான பிரினெல் டி சில்வா வுடன் ஏறினேன் .

   சிங்கப்பூர் வந்திறிங்கிய போது கப்பல் தாமதமானதால் விடுதியில் தங்கியிருந்தோம் .அதற்க்கு முந்தைய கப்பலில் இருந்தபோது மலேசியாவில் செய்யதலி அண்ணன் வீட்டில் அறிமுகமான நண்பர் மணியை அழைத்தேன் மாலையில் அவர் குடும்பத்துடன் விடுதியறைக்கே வந்து சந்தித்தார் .

 சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்தின் லாம்ச்சபாங் நகரில் உள்ள கப்பல் பழுதுபார்க்கும் யார்டில் பதிமூன்று நாட்கள் பாராமரிப்பு பணிகள் செய்துவிட்டு அங்கேயே கார்களை ஏற்றி விட்டு நீண்ட(26நாட்கள்) பயணமாக சிலி நாட்டின் (santiago )தலை நகரான சான்டியாகோவிலுள்ள துறைமுகத்தை அடைந்தோம் .

 பின்னர் கப்பல் அங்கிருந்து  குவாதமாலா,ஹோண்டாருஸ்,எல்சால்வர் ,நிராகுவா ,ஈக்குவாடோர்,கொலம்பியா ,மேக்ஸிகோ என ஓடியது .ஜூன்,ஜூலை மாதங்களில் சிலி யில் குளிர் காலம் பத்து நாட்கள் பயணத்தில் கப்பல்  மெக்ஸிகோவை அடைந்துவிடும் அங்கு கடும் வெப்பம் .

 ஈக்குவடாரை நெருங்கியதுமே வெப்பம் அதிகரித்துவிடும் .இருந்தாலும் மனதை மயக்கும் ஊர்கள் மெக்ஸிகோவின்  அக்கபுல்கோ ,மன்சநிலோ ,லார்சனோ கார்டினேஷ் .மறுபக்கம் வெராக்ருஸ் .
  ஆகஸ்ட் மாதம் பானாமாவின் பல்போவா துறைமுகத்தில் கப்பலிலிருந்து இறங்கினோம் .நான் ,பிட்டர் மனோஜ் உட்பட ஏழு பேர் .ஐந்து பேர் பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்தவர்கள் .எனக்கும் மனோஜூக்கும் அன்றிரவு எட்டரை மணிக்கு விமானம் பானாமாவின் தலைநகரான பனாமா சிட்டியிலிருந்து .
மற்றவர்களுக்கு மறுநாள் காலை விமானம் ஆதலால் விடுதிக்கு வேறு காரில் சென்றனர் .

 குறைவான நேரமே எங்களுக்கு இருந்தது மயாமி செல்லும் விமானத்தை பிடிப்பதற்கு .ஏஜென்டின் மனைவி எங்களை விமான நிலையம் அழைத்துசெல்ல  காரோட்டி வந்திருந்தாள் .பேச்சு கொடுத்தேன் குழந்தைகள் இருக்கிறதா? இரண்டு குழந்தைகள் .இப்போது நான் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாக சொன்னாள்.கார் சற்று மெதுவாக செல்வதற்கான காரணம் அப்போதுதான் புரிந்தது .வழியில் எங்கும் போக்குவரத்து நெரிசல் இல்லாததால் சிக்கலன்றி ஆறரை மணிக்கு வந்தடைந்தோம் .

 பனாமா சிட்டி விமான நிலையத்தில் எங்களையும்,பயண பைகளையும் இறக்கிவிட்டு விடைபெறுகிறேன் என்றாள் பற்கள் தெரிய, நானும் மனோஜும் நன்றி கூறி  புன்னகைத்தோம்  . இரண்டு மணிநேரம் சர்வதேச விமானத்தை பிடிக்க மிக குறைவு
விமான நிலையத்தின் உள்ளே சென்றதும் ராணுவ உடையணிந்த வீரர்கள் இருவர் இடுப்பளவு உயரமுடைய ஒரு நாயுடன் வந்தனர் .வீரர்கள் எங்கள் பயண பைகளை கை சுட்டினர் .அந்த நாய் எங்கள் பைகளை உஸ்,உச ,உஸ் என மோப்பம் பிடித்தது .
பின் எங்களை உள்ளே செல்லுமாறு வீரர்கள் கையசைத்தனர் .பயண பைகளை எக்ஸ் ரே இயந்திரத்தில் சோதனையிடவில்லை.

     இருக்கை சீட்டு வாங்கும் இடத்தை கண்டடைந்து  பயண பைகளை அளித்துவிட்டு அங்கிருந்து மயாமி-நியூயார்க் –மும்பைக்கான இருக்கை சீட்டுகளை தந்துவிட்டு நியூயார்க்கில் எங்களது பைகளை எடுத்து மீண்டும் அடுத்த விமானத்தில் ஒப்படைக்குமாறு சொன்னாள் அங்கிருந்த பெண் .கடவு சீட்டில் அமெரிக்க விசா இருப்பதை சரிபார்த்தபின்னரே எங்களை பயணம் செய்ய அனுமதித்தாள் கோபா விமான பணிப்பெண்  கருப்பழகி.   நம்மூர் கருங்கல் சிலை போல .

  சிறுநீர் கழிக்க இயற்க்கை உந்தியது கட்டுபடுத்த இயலாதவாறு ,அவசரமாக ஓடினேன் சிறுநீர் கழித்தபின் தான் கவனித்தேன் இங்கெல்லாம் கழிப்பறைகளில் தண்ணீர் இருக்காது என்பதை  அதற்கு பிறகான தொழுகைகள் இயலாமல் போய்விட்டது .

  நானும் மனோஜும் நாங்கள் செல்லவிருக்கும் விமானத்தின் வாயிலை கண்டடைந்து காத்திருந்தோம்  வாயில் திறந்து பயணிகளை விமானத்தில் ஏற அனுமதித்ததும்  உள்ளே நுழைந்தோம் .
நள்ளிரவிற்கு பின் மயாமி விமான நிலையத்தை அடைந்தோம் .அடுத்த விமானம் நியூவார்க் நகரிற்கு, காத்திருந்தோம்  .அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தே இருவரும் சற்று கண் அயர்ந்தோம் .

 அதிகாலை மீண்டும் இயற்கை  உந்துதல் வயிறு லேசாக வலித்தது .தண்ணீர் பிடித்து செல்ல குப்பைதொட்டிகளை துளாவினேன் போத்தேல் களை தேடி அப்போதுதான் அனைத்து குப்பைதொட்டிகளையும்  காலி செய்து புதிய பாலித்தீன் உறைகளை மாற்றியிருந்தனர் பணியாளர்கள் .
  சிறிது நேரம் காத்திருந்தேன் ஒருவர் பழசாறு போத்தலை குப்பைதொட்டியில் போட்டார் அதை எடுத்து கொண்டு தண்ணீர் பிடித்து கழிவறை சென்று வந்தேன்.உடலும் மனமும் சற்று தளர்வானது.எப்போதுமே கழிவுகள் வெளியேறும்போது ஒரு சுகம் .

  ஏனோ வெளிநாட்டினரை போல் காகிதத்தால் துடைக்கும் பழக்கம் நம்மால் இயலவில்லை. மனோஜிக்கு எந்த பிரச்னையும் இல்லை பல் தேய்க்க மட்டும் ஒருமுறை போய் வந்தான் . இளம் பெண்கள் மூவர் தள்ளாடியபடி அருகிலிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர் .மனோஜ் அந்த மூவரும் குடி போதையில் கழிவறையில் வாயுமிழ்ந்து கொண்டிருந்ததாக சொன்னான் .
 அடுத்த விமானத்துக்கான நேரம் வரும் வரை தூங்கிகொண்டே இருந்தான் .

 அடுத்து செல்லவேண்டிய நியூவார்க் விமானத்தில் ஏறி கொண்டோம் .எனக்கும் மனோஜிக்கும் வேறு வேறு இருக்கைகள் .என்னருகில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான் .சற்று நேரத்தில் நடு வயதுடைய பெண்மணி அவனிடம் பயப்படாமல் பாதுகாப்பாக இருக்குமாறும் இருக்கை பெல்ட்டை எப்படி அணிவது என்றும் சொல்லிகொண்டிருந்தாள்.நான் அவளிடம் உன் மகனா என கேட்டேன் .ஆம் என்றாள். இந்த இருக்கையில் அமர்கிறாயா ?என்றதும் கண்கள் விரிய அவள் முகம் மலர்ந்தது .

 ஆனால் என் இருக்கை இதுபோல் ஜன்னலோர இருக்கையல்ல அதில் போக உனக்கு விருப்பமா என கேட்டாள்.அதனாலென்ன நீ உன் மகனுடன் பயணம் செய் என்றேன் .மகிழ்ச்சியுடன் என் கைகளை பற்றி நன்றி சொல்லி அவளது இருக்கைக்கு அருகில் என்னை அழைத்துசென்று  காண்பித்தாள்.மூன்று இருக்கைகள் கொண்ட வரிசையில் எனக்கு கடைசி இருக்கை என்னருகில் இடப்புறமான நடு இருக்கையில் விமான நிலையத்தில் நான் கண்ட மூன்று போதை பெண்களில் ஒருத்தி தொடை தெரிய அமர்ந்திருந்தாள்.

 வலப்புற நடை பாதையை ஒட்டிய இருக்கையில் அவளின் தோழி நல்ல நிறம் .இவள் கறுப்பு.விமானம் சென்று கொண்டிருக்கையில் எனக்கு தண்ணீர் தந்த விமான பணிப்பெண் கைதவறி தண்ணீரை  என் மீது கொட்டி விட்டாள் .பல முறை சாரி ,சாரி என சொல்லிவிட்டு காகிதத்தால் துடைத்துவிட்டாள் ஈரமான இருக்கையை .
  என்னருகில் இருந்தவள் எனக்கும் பேப்பர் கொடு இங்கும் தண்ணீர் கொட்டிவிட்டது என்றாள் சினத்துடன் .

 சற்று நேரத்திற்கு பின் இயல்பாக வலப்புறம் திரும்பினேன் அந்த இருக்கையில் இருந்த பெண் மேலாடையின்றி இளமுலைகள் தெரிய துயிலில் இருந்தாள் நான் திரும்பிய அதே கணம் அவளும் திரும்ப  விழிகள் சந்தித்தபின்னரே தன் மார்பகங்களை குனிந்து பார்த்தவள் அவசரமாய் திகைப்புடன்  கிழே விழுந்திருந்த தேங்காய்துருவல் துண்டை எடுத்து  போர்த்திகொண்டாள்.
 அதன் பின் நான் அவளை பார்க்கவேயில்லை .

நியூவார்க் விமான நிலையத்தில் எங்களது  பைகளை எடுக்க சொல்லி விமான பணிப்பெண் சொன்னாள் .இங்கே குடியுரிமை சோதனையும் இருந்தது .

  நியூவார்க் விமான நிலையத்தில் பத்து மணிநேர காத்திருப்பு .விமான நிலையத்தில் இருந்த கடையில் பழம் வாங்க சென்றேன் கடைகாரர் ஒரு பழம் ஒரு டாலர் என்றார் .என்னையறியாமலே இரண்டு பழம் வாங்கினால் இரு டாலர்களா? என தமிழில் கேட்டேன் .அவர் புன்னகைத்தவாறே இந்தியாவிலிருந்து வருகீர்களா என்றார். (எனக்கும் ஆச்சரியம் தான் எப்படி அந்நேரம் தமிழ் என் வாயில் வந்தது என .)தன்னை அறிமுகபடுத்திகொண்டு இலங்கை தமிழில் பேசினார் .ஆறு பழங்களை பையில் போட்டு தந்தவர் காசு வாங்க மறுத்துவிட்டார்.

  அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்தே தூங்கினோம் .பத்து மணி நேர காத்திருப்பு சற்று அவஸ்தைதான் .மதிய உணவு நெருங்கியபோது மனோஜ் அந்த தமிழரிடம் வாங்க வேண்டாம் அவர் காசு வாங்க மாட்டார் எனவே வேறு கடையில் இரு பர்கர்கள் வாங்கி கொறித்து கொண்டோம் மதிய உணவாக .
மாலையில் தேனிருக்கு மீண்டும் இலங்கை தமிழரின் கடைக்கு சென்றோம் எனக்கு கறுப்பு டீயும் மனோஜிக்கு காபியும் இரு காகித குவளைகளில் தந்துவிட்டு அதற்கும் காசு வாங்க மறுத்து விட்டார் எப்போது உங்கள் விமானம் என கேட்டார் .

 தேநீர் அருந்துகையில் தெனிந்திய முகம் ஒன்று அருகில் இருப்பதை கண்டு புன்னைகையுடன் என்னை அறிமுகம் செய்து கொண்டு உரையாடினேன் .
அவர் மலையாளி கொச்சி சொந்த ஊர் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசிப்பதாக சொன்னார் எட்டு ஆண்டுகளுக்கு பின் தந்தையை காண்பதற்காக ஊருக்கு செல்வதாக சொன்னார் .உனக்கு எப்படி மலையாளம் தெரியும் என கேட்டார் .

 இங்கே குடும்பத்துடன் வசித்தாலும் அவரும் மனைவியும் சந்திப்பது பெரும்பாலும் சாலையில்தான் .அவருக்கு இரவு பணி ,மனைவிக்கு பகல் நேர பணி .மனைவி பணி முடிந்து வீடு திரும்புகையில் இவர் பணிக்கு செல்ல வேண்டும் .

  சாலையில் இவர்கள் இருவரும் சந்தித்து கொள்வார்களாம் .என்னடா கொடுமை என நினைத்துகொண்டேன் .அந்த குறுகிய நேரத்தில் என்ன பேசிகொள்வார்களோ?

அவரும் நாங்கள் செல்லும் அதே நியூவார்க்-மும்பை விமானத்தில் பயணம் .பயண நேரம் நெருங்கியதும் விமானத்தில் அமர்ந்தோம் .இரவு எட்டுமணிக்கு புறப்படவேண்டிய விமானம் தாமதமாகவே புறப்பட்டது  அதிகமான விமானங்கள் தரை இறங்கிக்கொண்டே இருந்தது ஓடு தளத்தின் அருகின் எங்கள் விமானத்தை அரை மணிநேரம் நிறுத்தி வைத்திருந்தனர் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்தேன் .மூவர் அமரும் இருக்கையில் நானும் மனோஜும் மட்டுமே .
  விமானம் பறக்க தொடங்கியதும் அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை தெரிகிறதா என பார்த்தேன் .மனோஜ் கண்ணாடியை உடைத்து விடாதே என்றான் .

  இரவுணவு விமானத்தில் நல்ல சைவ உணவு வெற்றிலை பாக்கு போல தரும் அளவு தான் மிக குறைவு .இரவுணவு முடிந்ததும் அதே போல் மேலும் ஒரு உணவு பொதியை தந்துவிட்டு விளக்குகளை அணைத்துவிட்டனர் .மனோஜ் என் தொடைகளில் கால்களை நீட்டி படுத்து கொண்டான் .பெரும்பான்மையோர் நல்ல துயிலில் இருப்பது போல தோன்றியது .
 நான் சிறிது அமர்ந்தே துயின்றேன் .நீண்ட பயணம் குறுகலான இருக்கைகள் என்னால் சரியாக அமரவே இயலவில்லை .இரண்டு மணி நேரத்திற்கு பின் விமானத்தின் பின் புறம் போய் நின்றுகொண்டேன் .அங்கே அடிக்கடி தேநீரும் கிடைத்தது .

மும்பையை சேர்ந்த தமிழர் செந்தில்குமார் என்னை போலவே தூக்கமின்றி பின்பக்கம் வந்தார் .அறிமுகமானதும் என் இருக்கை காலியாக இருக்கிறது  அங்கிருந்து பேசுவோம் என சொன்னார் .
 அவர் ஆறு ஆண்டுகள் நியூயார்க் இல் வேதியியலில் தனது ஆராய்ச்சி படிப்பை முடித்து விட்டு தாயகம் திரும்புவதாக சொன்னார் .நியூமரலோஜி யிலும் தேர்ந்தவர் என்றார் .

எனக்கு அதற்க்கு முந்தைய ஆண்டு இருந்த தோல் வியாதி பற்றி அவரிடம் கூறினேன் .எனது பிறந்த தேதியை கேட்டுவிட்டு முற்றிலும் மாற்றிவிட முடியாது .எனினும் உணவு கட்டுபாடு மற்றும் சில பயிற்சிகளால் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்றார்.

 மொத்த பயண நேரத்தில் ஆறேழு மணி கழிந்தபின் மீண்டும் என் இருக்கைக்கு சென்று கொஞ்சம் துயின்றேன் .விழித்தபின் மீண்டும் பின்னால் போய் நின்று கொண்டேன் .இப்போது விமான பணிபெண்கள் கொஞ்சம் புன்னகைத்தனர் இருக்கையில் சென்று அமருங்கள் என சொல்லவில்லை . கேட்ட போதெல்லாம் கறுப்பு டீ தந்தனர் .

  இரவில் புறப்பட்டோம் வழிநெடுகிலும் கண்ணாடி வழி பார்த்தேன் இரவாகவே இருந்தது .பனிரெண்டு மணிநேரம் ஆனதும் விமானத்தின் விளக்குகளை எரியவிட்டனர் .பணிபெண்கள் அணி செய்து உதட்டு சாயம் பூசி வெண்ணிற பற்கள் தெரிய பிரேக் பாஸ்ட் என்றனர் .
காலை உணவு  ரொட்டியும் ,வெட்டிய பழத்துண்டுகளும் ,வெண்ணையும் ,ஜாமும் ,உடைத்த முட்டையை கலக்கி ஆவியில் வேக வைத்ததும் .வீட்டுக்கு போய் மீன்கறி வெச்சி சாப்பிட்டாதான் வயிறு நெறையும் என நினைத்துகொண்டேன்.

  உணவு உண்டு பணிபெண்கள் அவசரமாய் பயணிகளிடமிருந்து உண்ட மிச்சத்தையும் ,காலி தட்டுகளையும் அப்புறபடுத்தியபின் .விமான ஓட்டியின் அறிவிப்பு .இன்னும் அரை மணி நேரத்தில் நாம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் தரையிறங்க போகிறோம்.அங்கெ உள்ள வெப்பநிலை 27 டிகிரி என .நான் கடிகாரத்தின் நேரத்தை இந்திய நேரப்படி மாற்றினேன் இரவு ஒன்பது மணி அப்போது .
 நீண்ட நெடிய  பயணம் முதன் முறையாக பதினான்கு மணிநேரம் விமானத்தில்.

ஒன்பதரைக்கு மும்பையில் விமானம் இறங்கியது .நானும் மனோஜும் வெளியே வந்தோம் .மனோஜின் மனைவி வந்திருந்தார் .நான் எனது அறையின் நண்பர்கள் மைகேல் மற்றும் மாயாவியை வரசொல்லியிருந்தேன்.அவர்கள் நண்பர் நித்யாவின் காரில் வந்திருந்தனர் .மனோஜிடம் விடை பெற்று சற்று தள்ளி நண்பர் நித்யாவின் கார் நின்ற இடத்திற்கு நடந்தே சென்றோம் .

  இரவு பதொனொரு மணியிருக்கும் அறை சென்று சேரும்போது.குளிக்க தண்ணீர் இல்லை கை கால் கழுவினேன்.எனது பகல் ஒரே நாளில் இரவாகிவிட்டது.கையில் இருந்த மெல்லிய போர்வையை தரையில் விரித்து படுத்தேன் .பத்துக்கும் மேற்பட்டவர்கள் தூங்கி கொண்டிருந்தனர் .தூக்கமே இல்லை இரவு முழுவதும் .

  அதிகாலை மூன்று மணிக்கு மேல் ஒரு மணிநேரம் துயின்றிருப்பேன் .நான்கரைக்கு எழுந்து நன்றாக குளித்தேன் தண்ணீர் வந்து கொண்டிருந்தது .தண்ணீர் பிடிக்கும் ஒருவரை தவிர அனைவரும் தூக்கத்தில் இருந்தனர் .அருகிலிருந்த பள்ளிவாசலுக்கு காலை தொழுகைக்கு சென்று வந்தேன் .

 திரும்பி வரும்போது அரையிருள் அறை நண்பர்கள் சிலர் விழித்திருந்தனர் .தேநீர் அருந்தலாம் என வெளியில் சென்றோம்.உம்மாவிற்கும் ,சுனிதாவிற்கும் அழைத்து சொன்னேன் .
 அடுத்த விமானம் காலை பத்து மணிக்கு மும்பையிலிருந்து –திருவனந்தபுரதிற்கு உம்மாவிடம் சோறும் மீன் கறியும் கொண்டு வர சொன்னேன் .

ஏழரைக்கு அறையிலிருந்து புறப்பட்டோம் நித்யாவே வந்திருந்தார் .மாயாவி என்னுடன் விமான நிலையம் வந்தார் .காரிலிருந்து இறங்கும்போது நடிகர் டில்லி கணேஷ் விமான நிலைய வாயிலில் நின்றுகொண்டிருந்தார் .

 ஜெட் ஏர் வேய்ஸ் விமானம் .தமாதமாக புறப்பட்டது நாற்பத்தைந்து நிமிடங்கள் .திருவனந்தபுரம் செல்லும் உள்ளூர் விமானத்தில் எப்போதும் ஜன்னலோர இருக்கை கேட்டு பெற்று கொள்வேன் .விமானம் இறங்குகையில் கடற்கரையும் ,அந்த செம்மண் நிறமும் அடர்ந்த பச்சையான தென்னைமரங்களும் காண்கையில்  ஒரு உற்சாக மனநிலை தானாகவே வரும் .

  தரை இறங்கும்போது மணி பனிரெண்டே முக்கால் ஆகியிருந்தது .பல்போவாவில் புறப்பட்டு ஐம்பது மணி நேரத்துக்கும் மேல் அதிகமாகியிருந்தது .சாலிமும் ,ஷேய்க் ம் ,சுனிதாவும் ,மாமியும் உம்மாவும் வந்திருந்தனர் .ஷேய்க் கார் ஓட்டினான் .வழியில் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உம்மா கொண்டு வந்திருந்த சுவையான மீன்கறியும் சோறும் தின்றோம் .


  இரு நாட்களுக்கு பின் இப்போதுதான் என் வயிறு நிறைந்தது .

ஷாகுல்  ஹமீது