Monday 25 December 2017

திற்பரப்பு அருவி


  கிறிஸ்துமஸ் தினமான இன்று காலை மகன்களுடன் குமரி குற்றாலமான திற்பரப்பு அருவிக்கு காலைகுளியலுக்கு சென்றோம் .

காலை தொழுகைக்கு வடசேரி பள்ளிவாசலுக்கு கால்நடையாக சென்று திரும்பி வர மணி ஆறரை ஆகிவிட்டது .நேற்றிரவே சாலிமும்,சல்மானும்  குளியல் ஆடைகளை எடுத்து வைத்துவிட்டே படுக்கைக்கு சென்றனர் .
Add caption


  திற்பரப்பு ,திற்பரப்பு என சொன்னதுமே சல்மான் எழுந்துவிட்டான் ,சாலிம் துயில் கலைய தாமதமாகிவிட்டது .ஏழு நாற்பதுக்கு எனது சுசுகியில் புறப்பட்டோம் .


  ஒரு மணிநேர பயணம் .நாகர்கோயில் திற்பரப்பு முப்பதைந்து கிலோமீட்டர் .விடுமுறைதினம்  ஆதலால் சாலையில் அதிக நெருக்கம் இல்லை .தக்கலையிலிருந்து பத்மனபாபுரம் அரண்மனை ,சித்திரங்கோடு குலசேகரம் வழியாக அடர் காட்டுக்குள் பயணிப்பது போல  உணர்வு .காலை குளிரை சல்மானால் தாங்கஇயலவில்லை .ஒகி  புயலில் சாய்ந்த மரங்கள் வழிநெடுகிலும் கிடக்கறது .

  திற்பரப்பு அருவியில் மிகையாக தண்ணீர் கொட்டுகிறது,பாதுகாப்பு கம்பிகளுக்கு சற்று வெளியே தண்ணீர்  .அருவியை சுற்றிலும் நீர் திவலைகள் ஐந்தடி மேல் எதுவும் தெரியவில்லை .அதிக திரள் இல்லை உற்சாக குளியல் ஒரு மணிநேரம்.விசையுடன் கொட்டும் தண்ணீருக்கடியில் ஒரு நிமிடத்திற்கு மேல் நிற்க்கவியலவில்லை நல்ல இயற்கை மசாஜ். சாலிமும் ,சல்மானும் அங்கிருந்து நீச்சல்குளத்தில் விடையாட சென்றனர் .
கையில் டீபுடன்  சாலிம்



  பத்தரை மணிக்கு அருவியிலிருந்து வெளியேறுகையில் நல்ல திரள் ,மேலும் மக்களும் ,வாகனங்களும் வந்துகொண்டே இருந்தனர் .

   இங்குள்ள  சிறுவர் பூங்காவில் சல்மான் சிறிதுநேரம் விளையாடினான் .உணவருந்தும் இடமும்,
ஆண் ,பெண் ஆடை மாற்ற இடமும் இங்கு உள்ளது .


   ஆடைமாற்றியதுமே  சல்மான் வாப்பா ,பசிக்குது ,பசிக்குது என்றான் .வெளியில் வந்து பிராதன சாலையில் இருந்த உணவகத்தில் நிறுத்தினேன் சாலிம் வாப்பா இது சுத்தமாக இல்லை நான் சாப்பிட வரவில்லை என்றான் .

இங்கு இப்படிதான் இருக்கும் ஓடல்  இங்கே கிடையாது என்றேன் .இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஹோட்டல் கங்கா பலகையை கண்டு நிறுத்தினேன் .

தோசையும் ,பரோட்டாவும் இருந்தது ,வெகுநாட்களாகிவிட்டது  பரோட்டா சாப்பிடுவதில்லை .தோசை என்றேன்  (கல் தோசை )அறுபது வயதை தாண்டிய ஒரு அம்மாவும் அவரது மகளும் அந்த சிறிய உணவகத்தை நடத்துகின்றனர் .

அந்த அம்மையார் கறிவிடட்டா மக்களே என்றார் என் மகன்கள் புரியாமல் விழித்தனர் .வாப்பா இது என்ன கறி  தீயல் மக்களே சாப்புடு என்றேன் .சாம்பார் இல்லையா முடிஞ்சது மக்களே என்றார் .சம்பந்தி விடட்டா என கேட்டு சட்னி கொடுத்தார் .

   பாட்டி .புரோட்டா வேணுமா ,வேண்டாம் அம்மச்சி என்றேன் .வெள்ளம் வேணுமா ,பச்சவெள்ளமா ,சூடுவெள்ளமா சல்மான் மீண்டும் புரியாமல் விழிக்க அந்த அம்மையார் குடிக்க தண்ணி வேணுமா என கேட்டார் . சல்மான் டபுள் புல்சை வேண்டுமென்றான் அணைந்திருந்த விறகடுப்பை கொஞ்சம் காய்ந்த ஓலையால் பத்தவைத்து புல்சையும் ,சாலிம்க்கு ஆம்ப்லேட்டும் போட்டு தந்தனர் .

   அன்பான உபசரிப்பு இருவரும் என்ன படிக்கிறார்கள் என கேட்டனர் .மூன்று பேருக்கும் பனிரெண்டு தோசை ,ஒரு டபுள் புல்சை ,டபுள் ஆம்ப்லேட் மொத்தம் எண்பத்திஎட்டு ரூபாய் .சமீபத்தில் இவ்வளவு மலிவாக எங்கும் சாப்பிட்டதே இல்லை .அம்மச்சி எத்ற வருசமாட்டு கடையை நடத்துதீயே என கேட்டேன் கொஞ்சம் அப்பறம் சொந்த கடை ,இது வாடகையாக்கும் .அது என்னாச்சி அம்மச்சி  அத மொவனுக்கு கொடுத்தாச்சி .மொத்தம் எல்லாம் இருவத்திமூணு வருசமாச்சி என்றார் .
  
  வில்லுக்குறி தாண்டி தோட்டியோடுக்கு முன் நொங்கு சர்பத் குடிக்க நிறுத்தினேன் .ஒரு கப் ஐம்பது ரூபாய் என்றார், அக்கா நாற்பது தானே என கேட்டேன் .இல்லை என்றார் .பத்தடி தாண்டி வேறுகடையில் நாற்பதுக்கு கிடைத்தது .கடையருகில் நின்ற பனைமரத்தை படம் பிடித்தேன் ,பாதர் காட்சனுக்கு காண்பிக்கலாம் மகிழ்வார் என்றேன் .சல்மான் வாப்பா இதுதான் நொங்கு மரமா என கேட்டான் .
ஸாலிம் 
  
 
ஓஹி சாயத்துவிட்டாள்
இந்த விடுமுறைக்கு கன்னியாகுமரி செல்ல திட்டமிடுபவர்களுக்கு உகந்த பருவநிலை இது .குமரியில் அதிகாலை சூரிய உதயமும் பார்த்துவிட்டு காலையுணவிற்க்குபின் சுசீந்தரம் கோயில் .அங்கிருந்து நாகர்கோயில் நாகராஜா கோயில் பார்க்கலாம்.

பின்னர் தக்கலை பீர்முஹம்மது அப்பா தர்கா ,பத்மனபாபுரம் அரண்மனை யும் (நானூறு வருடம் பழமையானது , திங்கள்கிழமை விடுமுமுறை )அங்கிருந்து ஆசியாவின் மிக உயர்ந்த மாத்தூர் தொட்டி பாலமும்  பார்த்துவிட்டு இறுதியாக திற்பரப்பு அருவியில் நீராடி ஒரே நாளில் உடலும் 
,மனமும் தூயமைபெற்று மகிழ்வுடன் திரும்பலாம் .
  
இந்த விடுமுறைக்கு கன்னியாகுமரி மற்றும் நாகர்கோயில் வருபவர்கள் தங்களுடைய தங்கும் இடங்களை உறுதிசெய்துவிட்டு  வாருங்கள் .ஜனவரி இரண்டாம் தியதிவரையில் எந்த விடுதியிலும் அறைகள் காலி இல்லை என்பது என்னுடைய போனஸ் தகவல்.
  மாமன் ,மச்சான் முன்னாள் காதலி ,பங்காளி போன்ற உறவினர்கள் இருப்பவர்கள் தங்குமிட கவலையின்றி இப்போதே புறப்படுங்கள் கன்னியாகுமரியை நோக்கி .விடுமுறை நாட்களை உற்சாகமானதாகுங்கள் .
  மேலும் வட்டகோட்டை,சொத்தவிளை கடற்கரை ,முட்டம் கடற்கரை,புலியுர்குருச்சி தேவசகாயம் பிள்ளை சர்ச் திருவட்டாறு ஆதிகேசவன் கோயில் ,சிதறால் மலை கோயில் பேச்சிபாறை ,பெருஞ்சாணி ,மாம்பழத்துறை அணைகள் என மேலும் பார்பதற்கு இடங்கள் உள்ளன 
தீயல் பற்றி அதிகமான கேள்விகள் வந்தால் அது  குறித்து 
விபரமாக பதிவிடுகிறேன் .

ஷாகுல் ஹமீது ,

25-12-2017

Friday 22 December 2017

சுரேசுக்கு இன்று முதல் விருது


          
    எனது நண்பன் சுரேசுக்கு தான் எழுதிய முதல் நாவல் ஒளிர்நிழல் ,முதல் சிறுகதை தொகுப்பு நாயகிகள்,நாயகர்கள்  ஆகியவற்றுக்காக சிறந்த அறிமுக எழுத்தாளர் விருதை வாசகசாலை, தமிழ் இலக்கிய விருதுகள்  பெருமையுடன் வழங்குவதாக அறிவித்துள்ளது கண்டு எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தேன் .வாழ்த்துக்கள் சகோதரா .


  சுரேஷை நான் கொல்லிமலையில் ஜெயமோகன் அவர்கள் நடத்திய  புது வாசகர் சந்திப்பில் முதன்முறையாக சந்தித்தேன் .அது முதல் தொடர்கிறது அவருடன்  நட்பு .

  ஜெயமோகனின் தளத்தில் வரும் சுரேசின் கடிதங்களின் மொழி என்னை மெய்சிலிர்க்க வைக்கும் .பெருஞ்சுழி என அவரது இணைய பக்கத்தில் எழுதினார் .
   
அப்போதே என்னையறிந்தவர்களிடம் நான் சொல்லிகொண்டிருந்தேன் .தமிழின் மிக முக்கியமான படைப்பாளி உருவாகிறார் என .
  அதை அவரது முதல் நாவல் ஒளிர்நிழல் உண்மையாக்கியது .

   கடந்த வாரம் நடந்த விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் ஒரு அமர்வில் வாசகர்களை சந்திக்கும் நல்வாய்ப்பை பெற்றார் .அது அவரது முதல் மேடை .என்னால் அதில் கலந்து கொள்ள இயலாமல் போயிற்று .
  
   இந்த வாரம் அவரது முதல் படைப்புக்கான விருதை பெறுகிறார் .நண்பன் சுரேசுக்கு எனது வாழ்த்துகளும் அன்பும் .உனக்கு நண்பன் என்பதில் பெருமைகொள்கிறேன் .
ஷாகுல் ஹமீது ,
23-12-2017